சந்திரபாவு நாயுடு மனைவி மீது அவதூறு விமர்சனம் : ஜூனியர் என்.டி.ஆர் ஆவேசம்
ஆந்திர மாநில சட்டசபை விவாதத்தின் போது ஆளும்கட்சி எல்.எல்.ஏ ஒருவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து தனிப்பட்ட முறையில் சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் வருவேன் என்று சபதமிட்டு கண்ணீருடன் வெளியேறினார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான ஜூனியர் என்.டி.ஆர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நமது மொழி நமது குணத்தை குறிக்கிறது. அரசியலில் மற்றவர்களை விமர்சிப்பது வழக்கம்.
விமர்சனங்கள் மக்கள் பிரச்சனைக்காக இருக்க வேண்டும். அவை தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. தனி நபர்களை அவதூறாக பேசக்கூடாது. பெண்களை மதிப்பது நமது பாரம்பரியம் , அதைக் கைவிடுவது பேரழிவை ஏற்படுத்தும். ஆந்திர சட்டசபையில் நடந்த சம்பவம் என்னை காயப்படுத்தியுள்ளது.
நாம் தனிமனித தாக்குதல்களை நடத்தினால் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கேவலமான வார்த்தைகளால் அவதூறு செய்தால் அது காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு வழிவகுக்கும். பெண்களை மதிப்பது நமது இரத்தத்திலும் பாரம்பரியத்திலும் உள்ளது. இந்த பாரம்பரியத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அது அடுத்த தலைமுறைக்கு பெரும் அவமானமாக இருக்கும்.
நான் நந்தமுரி குடும்ப உறுப்பினராக இதனை பேசவில்லை. ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, இந்தியக் குடிமகனாக, தெலுங்கனாகப் பேசுகிறேன். பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் இந்த நாகரீகமற்ற கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.