வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை கடந்து வளர்ந்து வந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நாளை(நவ.,25) இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தியேட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் கடைசிநேரத்தில் இந்த படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல கொரோனா செலுத்தியதற்கான சான்று அவசியம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ‛‛உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் ‛‛18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே செலுத்தாத நிலையில் அவர்கள் எப்படி கொரோனா சான்றுடன் தியேட்டருக்கு வர முடியும். எனவே இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார்.
இப்படிப்பட்ட சூழலில் மாநாடு படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களுக்கு செல்ல கொரோனா சான்று கட்டாயம் என அரசு அறிவித்ததால் நிச்சயம் ரசிகர்கள் கூட்டம் குறையும். அதனால் படத்தின் வசூல் பாதிக்கலாம் என இந்த முடிவை தயாரிப்பாளர் எடுத்திருக்கலாம். இல்லையென்றால் வேறு எதுவும் நிதிச் சிக்கலா இல்லை சிம்புவின் பழைய பட பஞ்சாயத்தால் ஏற்பட்ட சிக்கலாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.