சுருளி படத்தை தணிக்கை செய்யவில்லை: வாரியம் அறிவிப்பு
ஆஸ்கர் விருது வரைக்கும் சென்ற ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெலிசேரி. மலையாள சினிமாவில் கவனம் ஈர்த்த ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ படங்களை இயக்கியவர். தற்போது மம்முட்டி நடிப்பில் நன்பகல் நேரத்து மயக்கம் என்ற தமிழ் படத்தை இயக்கி வருகிறார்.
இவர் கடைசியாக இயக்கிய மலையாள படம் தான் சுருளி. அடர்ந்த மலை கிராமத்துக்குள் தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளியை பிடிக்க ஒரு சப் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்ட்பிளும் மாறு வேடத்தில் செல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் தான் படம். சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் படுமோசமான ஆபாச வசனங்கள், கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. அதுவும் பெண்களை பேச வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டம் தெரிவித்து வருகிறார்கள். சிலர் தணிக்கை வாரியத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரள சினிமா தணிக்கை வாரியம் சுருளி படம் எங்களால் தணிக்கை செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் மண்டல தணிக்கை அதிகாரி வி.பார்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஓடிடி தளமான சோனி லைவ் மூலம் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படமான சுருளி தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட பிரதி அல்ல என்பதை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.