சிவகார்த்திகேயனை விஜய்யாக மாற்றிய நடன இயக்குனர்
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இருந்து சமீபத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஜலபுல ஜங் என்கிற பாடல் வெளியானது. இந்தப்பாடலில் சிவகார்த்திகேயனின் நடன அசைவுகள் இன்னும் கொஞ்சம் மெருகேறியது போல் தெரிகிறது.
குறிப்பாக இந்தப்பாடலில் ஒரே காலை மட்டும் அசைத்தபடி சிவகார்த்திகேயன் நடனமாடுவதை பார்க்கும்போது அழகிய தமிழ்மகன் படத்தில் வளையபட்டி தவிலே பாடலுக்கு விஜய் இதேபோல நடனமாடியது தான் ஞாபகத்துக்கு வருகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அந்த பாடலுக்கு விஜய்யை ஆடவைத்த ஷோபி மாஸ்டர் தான் இந்தப்பாடலுக்கு சிவகார்த்திகேயனையும் ஆடவைத்துள்ளார். அதனால் சிவகார்த்திகேயனுக்கும் இதுபோன்ற நடன அசைவுகளை அவர் வடிவமைத்திருக்கலாம் என்றே நினைக்க தோன்றுகிறது.