திருமண தேதியை வெளியிட்ட தீபக் - அபிநவ்யா
சின்னத்திரை காதல் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலாக மாறிவிட்டது, என்று சொல்லும் அளவிற்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கடந்த காலங்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் மிக விரைவில் தீபக் - அபிநவ்யா திருமணம் நடைபெற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் தீபக். அதேபோல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், ஆங்கர், நடிகை என பல ரோல்களில் கலக்கியவர் அபிநவ்யா. சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
தீபக் - அபிநவ்யா ஜோடி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் தீபக் - அபிநவ்யா ஜோடிக்கு வருகிற ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை அவர்கள் தங்களது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள, சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.