இந்த வார வெளியீடுகள் காப்பாற்றுமா?
கொரோனா ஒமிக்ரான் அலை பரவல் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தான் நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளிவந்த படங்களுக்கு சுமாரான அளவில் கூட வரவேற்பும், வசூலும் இல்லை.
கடந்த வாரம் வெளியான விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படம் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்து விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் ஏமாற்றத்தைத்தான் தந்தது. மிக சுமாரான வசூல்தான் இப்படத்திற்குக் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, நாளை பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடித்துள்ள 'எப்ஐஆர்', விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'கடைசி விவசாயி', ராஜாஜி நடித்துள்ள 'கூர்மன்', புதுமுகம் கிஷன் நடித்துள்ள 'அஷ்டகர்மா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'எப்ஐஆர், கடைசி விவசாயி' ஆகிய படங்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வாரம் விஷாலுக்குக் கிடைக்காத வெற்றி விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி ஆகியோருக்குக் கிடைக்குமா என்பதற்கு நாளை வரை பொறுத்திருக்க வேண்டும்.