ஐபிஎல் ஏலத்தில் ஷாரூக்கான் மகன், மகள்
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. 10 அணிகளுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள். நெருங்கிய நண்பர்களான பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நடிகை ஜுகி சாவ்லா ஆகியோரும் கோல்கட்டா அணியில் பங்குதாரர்கள்.
ஒவ்வொரு வருட ஏலத்திலும் கடந்த சில வருடங்களாக கோல்கட்டா அணி சார்பாக ஜுகி சாவ்லாவின் மகள் ஜானவி மேத்தா கலந்து கொண்டுள்ளார். இந்த வருட ஏலத்தில் நடிகர் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வருடம் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று பின் ஜாமீனில் வெளிவந்தவர் ஆர்யன் கான்.
ஜானவி, ஆர்யன், சுஹானா ஆகியோர் ஏலம் குறித்து விவாதிக்கும் புகைப்படங்களை கோல்கட்டா அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஷாரூக் வாரிசுகள் கலந்து கொண்டுள்ளதால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கோல்கட்டா அணி சார்பாக வீரர்களை ஊக்குவிக்க அப்பா ஷாரூக்குடன் அவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.