தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்!
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். தற்போது 'பூத் பங்களா' என்று ஹிந்தி படத்தை அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கியுள்ளார். இது ப்ரியதர்ஷனின் 98வது படமாகும். வருகிற ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரியதர்ஷன்.
அப்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 'பூத் பங்களா' படத்தை அடுத்து ஹிந்தியில் சைப் அலிகான் நடிப்பில் 'ஹைவான்' என்ற எனது 99வது படத்தை இயக்குகிறேன். அந்த படத்தை முடித்ததும் 100வது படத்தை இயக்கப் போகிறேன். அது எனது சினிமா பயணத்தில் ஒரு சிறந்த மைல்கல் படமாக இருக்கும். முக்கியமாக எனது முதல் படத்தில் நடித்த மோகன்லாலை இந்த 100வது படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரியதர்ஷன்.
அந்த வகையில், ஒரு நடிகர் ஒரு இயக்குனரின் முதல் மற்றும் 100வது படத்திலும் நடிப்பது இதுவே முதல் முறையாகும். பிரியதர்ஷன் 1984ம் ஆண்டு மலையாளத்தில் முதன் முதலாக இயக்கிய 'பூச்சக்கொரு மூக்குத்தி' என்ற படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார்.