'வலிமை' தியேட்டர்களில் 'எதற்கும் துணிந்தவன்'
வினோத் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியானது. படத்தின் முதல் வார இறுதி நாட்களில் நல்ல வசூலைப் பெற்று 100 கோடியைத் தாண்டியதாக செய்திகள் வந்தன. பத்து நாட்களைக் கடந்துள்ள இப்படத்தின் வசூல் தற்போது 200 கோடியைத் தாண்டிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் பரப்பி வருகிறார்கள். ஆனால், உண்மை வசூல் என்னவென்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த வாரத்தின் வார நாட்களில் 'வலிமை' படத்திற்கு அதிகமான ரசிகர்கள் வரவில்லை, குறைந்ததாகச் சொன்னார்கள். ஆனால், நேற்றும், நேற்று முன் தினமும் விடுமுறை தினம் என்பதால் பல காட்சிகளுக்கு குடும்பத்து ரசிகர்கள் வந்ததாக படத்தை வெளியிட்டுள்ள பல தியேட்டர்காரர்கள் அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் இரண்டாவது வாரத்துடன் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 'வலிமை' ஓட்டம் முடிவுக்கு வரும் என்கிறார்கள். வரும் மார்ச் 10ம் தேதி சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியாகிறது. 'வலிமை' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் பல தியேட்டர்களில் அப்படத்தை மாற்றிவிட்டு 'எதற்கும் துணிந்தவன்' படத்தைத் திரையிடுகிறார்களாம். எஞ்சியுள்ள மீதி தியேட்டர்களில் பிரபாஸ் நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் மார்ச் 11ம் தேதி முதல் திரையிட உள்ளார்களாம்.
'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம்' படங்களுக்குப் பிறகு மார்ச் 25ம் தேதி ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகப் போகிறது.கடந்த ஆண்டு வெளியான படங்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய விஜய்யின் 'மாஸ்டர்' படம் அளவிற்கு 'வலிமை' ஓட வாய்ப்பில்லை என்பது அஜித் ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் ஒரு விஷயம்.