பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்
ADDED : 1259 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த சலீம் கவுஸ் (70) மும்பையில் காலமானார். சென்னையில் பிறந்து வளர்ந்தவரான சலீம் அகமது கவுஸ் எனும் சலீம் கவுஸ் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்தவர். பின்னர் மேடை நாடகங்கள், டிவி சீரியல்களில் நடித்தார்.
1978ல் ஸ்வர்க் நராக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவருக்கு தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு நடித்த வெற்றி விழா படத்தில் ஜிந்தா என்ற வில்லனாக நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.
தொடர்ந்து தமிழில் சின்னக் கவுண்டர், தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ஆண்ட்ரியா உடன் கா என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் தவிர்த்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஒரு ரவுண்ட் வந்தார். சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும், ஓரிரு ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தி லயன் கிங் உள்ளிட்ட ஓரிரு ஆங்கில படங்களுக்கு டப்பிங்கும் பேசி உள்ளார்.
மறைந்த நடிகர் சலீம் கவுஸிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.