ஒய் பிளஸ் ஆக உயர்த்தப்பட்ட சல்மான்கானின் பாதுகாப்பு
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். இவருக்கு கடந்த ஜூன் மாதம் லாரன்ஸ் பிஸ்நாய் என்கிற தாதாவின் கும்பலிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக மிரட்டல் எடுக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா என்பவர் இந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தான் இவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அந்த கும்பலை சேர்ந்த பல நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்தபோது சல்மான்கான் உயிருக்கு குறி வைத்திருப்பதாகவும் ஏற்கனவே அவர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும் பலரும் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் மகாராஷ்டிரா போலீஸ் சல்மான்கானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. இடையில் அவரது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளவும் உரிமம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் இவரது பாதுகாப்பை தற்போது ஒய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதன்படி சல்மான்கானுக்கு பாதுகாப்பாக அவருடன் எந்நேரமும் ஆயுதம் ஏந்திய நான்கு பாதுகாப்பு வீரர்கள் உடன் இருப்பார்கள். அதேசமயம் இந்த பாதுகாப்புக்கான செலவை சல்மான்கானே ஏற்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.