உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு நடிகர் மீது அர்ஜுன் குற்றச்சாட்டு

தெலுங்கு நடிகர் மீது அர்ஜுன் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜுன். சொந்தமாகப் படங்களைத் தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். தெலுங்கில் அவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தும் விதமாக விஷ்வக் சென் என்ற தெலுங்கில் வளரும் நடிகரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்தார்.

கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன் படத்தின் நாயகன் விஷ்வக் சென் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

“விஷ்வக் சென்னிடம் நான் கதை சொன்ன பிறகு அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார். அவர் என்ன சம்பளம் கேட்டாரோ அதை நாங்கள் கொடுக்கிறோம் என்றும் சொன்னோம். ஆனால், கேரளாவில் ஆரம்பமான படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. சீனியர் நடிகரான ஜெகபதி பாபுவுக்கும் அவருக்கும் இடையிலான காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டிருந்தோம். எனது வாழ்க்கையில் இதுவரையில் யாருக்கும் இவ்வளவு தொலைபேசி அழைப்புகளை நான் செய்ததில்லை, ஆனால், அவருக்குச் செய்தேன்.

அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் ஈடுபாட்டுடனும், தொழில் ரீதியாக அக்கறையாகவும் வேலை செய்கிறார்கள். ஒரு நடிகர் அவர் சார்ந்த கலை மீது ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர விருப்பமில்லை. அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன். அவருக்குப் பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

2020ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஹிட்' படம் மூலம் மற்ற மொழிகளிலும் தெரிய வந்த நடிகர் விஷ்வக் சென். தெலுங்கில் 'பலக்னும தாஸ்' என்ற படத்தை இயக்கியும் உள்ளார். அர்ஜுன், விஷ்வக் சென் விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுன் குற்றச்சாட்டு குறித்து விஷ்வன் சென் தரப்பிலிருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !