உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமர்சனம் செய்ய படிச்சுட்டு வரணுமா ? இயக்குனர் அஞ்சலி மேனனுக்கு குவியும் கண்டனம்

விமர்சனம் செய்ய படிச்சுட்டு வரணுமா ? இயக்குனர் அஞ்சலி மேனனுக்கு குவியும் கண்டனம்

மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி, நஸ்ரியா, நித்யா மேனன், பார்வதி என கலர்ஃபுல்லான இளம் நட்சத்திரங்களை வைத்து பெங்களூர் டேய்ஸ் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அஞ்சலி மேனன். அதற்கு முன்பாக அவர் இயக்கிய மஞ்சாடிக்குரு என்கிற படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பெங்களூர் வெற்றியை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவர் பிரித்விராஜை வைத்து இயக்கிய 'கூடே' திரைப்படமும் கூட ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்தநிலையில் அவர் ஆங்கிலத்தில் இயக்கியுள்ள வொண்டர் வுமன் என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அவரது ஆஸ்தான நடிகைகளான நித்யாமேனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசிய அஞ்சலி மேனன், படங்களை விமர்சிப்பவர்கள் அதுகுறித்து கொஞ்சமாவது கற்றுக்கொண்டு வந்து புரிதலுடன் விமர்சிக்க வேண்டும் என்று கூறினார். அவரது இந்த கருத்து சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.

பணம்கொடுத்து எங்களது நேரத்தையும் செலவு செய்து படம் பார்க்க வரும் நாங்கள் படம் நன்றாக இருக்கா இல்லையா என சொல்வதற்காக ஒரு கோர்ஸ் படிக்க வேண்டுமா என மலையாள திரையுலகின் உள்ள இளம் இயக்குனரான ஆண்டனி ஜோசப் என்பவரே அஞ்சலி மேனன் கருத்து குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர் கூறும்போது, “நீங்கள் ஹோட்டலில் சென்று ஆர்டர் செய்யும் தோசையை சாப்பிட்டுவிட்டு சரி இல்லை என்று நீங்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம். உடனே தோசை மாஸ்டர் உங்களை அழைத்து தோசை உருவாக்குவதில் எவ்வளவு வேலைகள் இருக்கிறது தெரியுமா என்று உங்களுக்கு பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்..? அப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

படம் வெளியாக இருக்கும் நேரத்தில் தான் கூறிய கருத்து இப்படி தனக்கு எதிராக கிளம்பியதை தொடர்ந்து, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று ஒரு விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஞ்சலி மேனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !