உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வாரிசு' - தெலுங்கு பக்கம் புரமோஷனுக்கு செல்வாரா விஜய்?

'வாரிசு' - தெலுங்கு பக்கம் புரமோஷனுக்கு செல்வாரா விஜய்?

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இப்படத்தைத் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படம் என்பதாலும் படத்தை நேரடிப் படம் போல தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே, டப்பிங் படமான 'வாரிசுடு'வை வெளியிட அங்கு பலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி படத்தை அதிக தியேட்டர்களிலும், முக்கியமான தியேட்டர்களிலும் வெளியிடுகிறாராம் தில் ராஜு. எனவே, படத்திற்கான புரமோஷனையும் பெரிய அளவில் நடத்த முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

வெளியீட்டிற்கு முன்பாக ஐதராபாத்தில் மட்டுமாவது பிரம்மாண்டமான பிரி--ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டம் உள்ளதாம். அதில் விஜய் கலந்து கொண்டு சிறப்பித்தால்தான் தெலுங்கிலும் படம் அதிகம் வசூலாகும் என பலரும் தெரிவித்துள்ளதால், விஜய்யை எப்படியாவது ஐதராபாத் நிகழ்ச்சிக்கு வரவழைக்க விஜய்யிடம் பேசி வருகிறாராம் தில் ராஜு.

இந்த வருடத் துவக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்திற்காக எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. ஒரே ஒரு பேட்டி மட்டுமே வழங்கினார் விஜய். அவரை படத்தின் இயக்குனரான நெல்சன் தான் பேட்டி எடுத்தார். 'வாரிசு' படத்திற்காக சென்னையிலும் நிகழ்ச்சி நடக்குமா என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அஜித்தின் 'துணிவு' படமும் போட்டியில் இருப்பதால் விஜய் மனம் மாறி சென்னை, ஐதராபாத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !