வணங்கான் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்த பாலா
ADDED : 940 days ago
பாலா இயக்கத்தில், சூர்யா, கிர்த்தி ஷெட்டி நடிக்க 'வணங்கான்' படம் கடந்த வருடம் ஆரம்பமானது. கன்னியாகுமரில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சூர்யா படப்பிடிப்பை விட்டு கிளம்பியதாக செய்திகள் வெளிவந்தன.
அதன் பிறகு அப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதன்பின் அப்படத் தயாரிப்பிலிருந்து விலகுவதாக சூர்யாவுக்குச் சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் அறிவித்தது.
இந்நிலையில் அந்தப் படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக ஆர்யா அல்லது அதர்வா நடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் இருவருமே நடிக்கவில்லை. தற்போது அருண் விஜய் நடிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பை பாலா மீண்டும் ஆரம்பித்துள்ளார். படப்பிடிப்புப் புகைப்படங்கள் சிலவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.