பலத்த சர்ச்சைகளுக்கிடையில் தனியாக வரும் 'மாமன்னன்'
'பரியேறும் பெருமாள், கர்ணன்' ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் நாளை(ஜூன் 29) வெளியாகிறது.
மாரி செல்வராஜ், கமல்ஹாசன், தேவர் மகன் என்ற விவாதம் அப்படியே சாதி பிரச்சினையாக, மோதலாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் படத்தை வெளியிட சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. மதுரை உள்ளிட்ட இடங்களில் படத்திற்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தணிக்கையான படத்தை வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என எதிர்ப்பைக் கிளப்புவது சரியா என மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்தது. இத்தனை சர்ச்சைகளுக்கிடையில் நாளை எந்த போட்டியுமின்றி இப்படம் வெளியாக உள்ளது. வெளியான பின் சர்ச்சைகள் பெரிதாகுமா அல்லது சத்தமில்லாமல் போகுமா என சினிமா வட்டாரங்களும், அரசியல் வட்டாரங்களும் ஒருவித தயக்கத்துடனேயே இருக்கிறார்கள்.