தியேட்டர் நொறுக்கு தீனிக்கு 5 சதவிகித வரி
தியேட்டர்களில் தற்போது தனி தியேட்டர்களில் 100 முதல் 120 ரூபாயும், மால் தியேட்டர்களில் 150 முதல் 200 ரூபாய் வரையும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் வெளி விலையை காட்டிலும் பல மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது. குறிப்பாக மால் தியேட்டர்களில் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது.
தற்போது தியேட்டரில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு ஏற்கெனவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதகிவித ஜிஎஸ்டி விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50வது கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளது.