இன்று சில முக்கிய படங்களின் ஆண்டு விழா
அக்டோபர் மாதக் கடைசியும், நவம்பர் மாத முதல் வாரமும் சினிமாவைப் பொறுத்தவரையில் முக்கியமான மாதங்கள். அந்த நாட்களில்தான் தீபாவளி. கடந்த வருடம் தீபாவளி தினம் அக்டோர் 21ம் தேதி வந்தது. அன்றைய தினம் கார்த்தி நடித்த 'சர்தார்' படமும், சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படமும் வெளியானது. அதில் 'சர்தார்' 100 கோடி வசூலித்து வெற்றிப் படமானது, 'பிரின்ஸ்' தோல்வியைத் தழுவியது.
அதற்கு முந்தை வருடங்களில் இதே நாளில் முக்கியமான சில படங்கள் வெளியாகியுள்ளன. 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படம் வெளியானது. இன்றுடன் அப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதே தினத்தில் விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் வெளியாகி தோல்வியடைந்தது.
2006ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சிம்பு, நயன்தாரா நடித்த 'வல்லவன்', சரத்குமாரின் 100வது படமான 'தலைமகன்', ஆகிய படங்கள் வெளிவந்தன.
1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'மனிதன்', பாலசந்தர் இயக்கத்தில் சுஹாசினி நடித்த 'மனதில் உறுதி வேண்டும்', விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' ஆகிய படங்கள் வெளியாகின.
எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'காதல் வாகனம்' படம் இதே நாளில் 1968ம் ஆண்டு வெளியானது.
இந்த 2023ம் வருடத்தின் தீபாவளி நவம்பர் 12ம் தேதி வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு 'ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.