உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வடக்கன்' படத்தில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர்

'வடக்கன்' படத்தில் அறிமுகமாகும் பெண் இசை அமைப்பாளர்

தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் மிகவும் குறைவு. ஒரு சிலர் வருகிறார்கள், ஓரிரு படங்களுடன் ஒதுங்கி விடுகிறார்கள். இளையராஜாவின் மகள் பவதாரிணி, ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா உள்ளிட்ட ஒரு சிலர் அவ்வப்போது படங்களுக்கு இசையமைக்கிறார்கள். இந்த நிலையில் 'வடக்கன்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்.

இவர் கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவர். இந்துஸ்தானி, வெஸ்டர்ன், கிளாசிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவர். தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றவர். இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகிறார். படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை ரமேஷ் வைத்யா எழுத, தேவா பாடினார். பாடலைப் பாடி முடித்ததும் ஜனனியை தேவா பாராட்டி ஆசி வழங்கினார்.

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனத்தை எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் படம் 'வடக்கன்'. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக 'வடக்கன்' உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !