ஒரு மாதத்தில் அரசியல் கட்சியாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்...?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விரைவில் அரசியலில் களம் காண உள்ளார். அதன் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், தொகுதி வாரியாக நூலகம், மழை வெள்ள பாதிப்பில் உதவி, தொகுதி வாரியாக மக்கள் நிர்வாகிகளின் சந்திப்பு என அரசியலுக்கான பணிகளை தீவிரமாக்கி வருகிறார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் இன்று(ஜன., 25) சந்தித்து பேசினார். இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு ஒரு மாதத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பாகவும் நிர்வாகிகள் உடன் பேசியதாக தெரிகிறது. அரசியல் கட்சியாக பதிவு செய்த பின் தேர்தலை சந்திக்கலாமா... கூட்டணி வைத்து போட்டியிடலாமா அல்லது தனித்தே போட்டியிடலாமா போன்ற விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.