சூர்யகிரண் மறைவுக்கு ஜெனிலியா இரங்கல்
மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நேற்று மறைந்த சூர்யகிரண்.
80களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில முக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அந்தக் கால சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்தவர்.
சூர்யகிரண் என்ற பெயரில் தெலுங்கில் 2003ம் ஆண்டு வெளிவந்த 'சத்யம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சுமந்த், ஜெனிலியா நடித்தனர். 150 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம் அது. தமிழில் 'பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம்' படங்களில் நடித்த ஜெனிலியாவுக்கு 'சத்யம்' படம்தான் முதல் தெலுங்குப் படம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெனிலியா. தனது முதல் பட இயக்குனரின் மறைவு குறித்து, “ஆழ்ந்த இரங்கல் அன்புள்ள சூரிய கிரண். என் முதல் தெலுங்குப் படமான 'சத்யம்' படத்தின் நினைவுகளுக்கு நன்றி. குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், வலிமையும் கிடைக்கட்டும்,” என இரங்கல் தெரிவித்துள்ளார்.