உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி

ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி

கடந்த பத்து வருடங்களாக மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ள அரவிந்த்சாமி நடிப்பில் தற்போது விஜய் சேதுபதியுடன் இவர் மீண்டும் இணைந்து நடித்துள்ள மவுனப் படமான காந்தி டாக்ஸ் இன்று வெளியாகியுள்ளது.. தளபதி படத்தில் இயக்குனர் மணிரத்னம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அடுத்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி வரிசைக்கு உயர்ந்தார்.

அதேசமயம் 2000க்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பிசினஸில் கவனம் செலுத்த துவங்கினார். 2005ல் அவர் ஒரு விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வரை படுத்த படுக்கையாக இருந்ததாக சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்டு பேசும்போது கூறியுள்ள அரவிந்த்சாமி, அதன்பிறகு ஆச்சரியப்படும் விதமாக என்ன நடந்தது என்பதையும் கூறியுள்ளார்.

“கடைசி வாய்ப்பாக காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அதன் பிறகு ஒருவேளை நடக்க முடிந்தாலும் முடியலாம் என்கிற நிலையில் தான் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது இருந்து தான் ஆயுர்வேத சிகிச்சை மீது என்னுடைய நம்பிக்கை வலுவாக பதிந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், மூன்றே நாட்களில் அனைவரும் அதிர்ச்சியில் வாய்பிளக்கும் விதமாக நான் நடக்க துவங்கினேன்.

அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடித்த சமயத்தில் தான் சினிமா வாய்ப்பு மீண்டும் மணிரத்னத்தின் கடல் படம் மூலமாக எனது கதவை தட்டியது. அதற்கு முன்னதாக அந்த 13 வருடங்களிலும் நான் சினிமாவில் நடிப்பதற்கு மனதளவில் தயாராக இல்லை. ஒரு பக்கம் என்னுடைய எடை கூடியதும் முடி கொட்டி விட்டதும் கூட ஒரு காரணம்” என்றும் கூறியுள்ளார் அரவிந்த்சாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !