இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும் , மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, ‛அஜந்தா - எல்லோரா' சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய இளையராஜா, ‛‛இந்த விழாவிற்கு வரும் முன் எனது 1541 பட பின்னணி இசையை முடித்துவிட்டு வந்தேன். இன்னும் எனக்கு இசை தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் வீட்டில் முடங்கி இருப்பேன். கற்க நிறைய இருப்பதால் இப்போதும் உழைக்கிறேன். இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசை அமைக்கலாம். ஆனால் நேரடி வாத்தியங்களில் வரும் இசை உணர்வை யாராலும் தர முடியாது. அதனால் தான் ஒவ்வொரு வாத்தியங்களுக்கும் குறிப்புகளை எழுதி அதன்படி இசையை பதிவு செய்கிறேன்” என்றார்.