உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மஞ்சும்மேல் பாய்ஸ் டிரைவர் இயக்கத்தில் நடிக்கும் பிரேமலு ஹீரோ

மஞ்சும்மேல் பாய்ஸ் டிரைவர் இயக்கத்தில் நடிக்கும் பிரேமலு ஹீரோ


கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் பிரேமலு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி 100 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல இதில் பிரேமலு திரைப்படம் சமீபத்தில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வாரம் தமிழிலும் வெளியாகி அதே போன்ற வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அறிமுக நடிகர் நஸ்லேன். இந்த படத்தில் அவரது நடிப்பு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குனர் காலித் ரகுமான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த 'உண்ட' மற்றும் டொவினோ தாமஸ் நடித்த 'தள்ளுமால' ஆகிய படங்களை இயக்கியவர். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு டூர் வரும் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கார் ஓட்டி வருவாரே ஒரு இளைஞர், அவர்தான் இயக்குனர் காலித் ரகுமான். இப்படி இரண்டு வெற்றி படங்களில் இருந்து இயக்குனரும் ஹீரோவும் கூட்டணி சேர்ந்திருப்பது மலையாள திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !