'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பம்
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, தியா படானி, அமிதாப்பச்சன், சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால், நேரடி தெலுங்குப் படம் என்பதால் தெலுங்கு மாநிலங்களில் இப்படத்தின் வசூல் மிக முக்கியமானதாக இருக்கும். படம் வெளியாகும் சமயம் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். எனவே, படம் மே 9ம் தேதி வெளியாகாது என்ற தகவல் பரவியது.
இது குறித்து தற்போது படத் தயாரிப்பாளர் வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் பேசி வருகிறாராம். மே 9க்குப் பிறகு எந்தத் தேதியில் படத்தை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என கலந்தாலோசித்து முடிவு செய்ய உள்ளார்களாம். அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு தேதியை முடிவு செய்யலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 15ம் தேதி அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அந்தத் தேதியில் மாற்றம் செய்யப் போவதில்லை என உறுதியாக உள்ளார்களாம். அதனால், அதற்கு முன்பாகவோ, பின்பாகவோ 'கல்கி 2898 ஏடி' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இருக்கும் எனத் தெரிகிறது.