'ஏஸ்' சூதாட்ட படமல்ல : இயக்குனர் சொல்கிறார்
விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள படம் 'ஏஸ்'. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் விஜய் சேதுபதியின் 51வது படமாக இது உருவாகிறது. இயக்குனர் ஆறுமுககுமாரே இப்படத்தை தயாரித்துள்ளார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரண் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
படம் பற்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆறுமுக குமார் கூறியிருப்பதாவது: சீட்டாட்டத்தை ஆரம்பித்து வைப்பதே ஏஸ் என்கிற முதல் கார்டுதான். ஏஸ் என்பதற்கு இன்னொரு பொருள் இருக்கிறது. எல்லா இடத்திலும் முதன்மையாக நிற்கிறவர்களை ஏஸ் என்பார்கள். விஜய் சேதுபதிக்கு நான் 3 கதைகள் சொன்னேன். அதில் அவர் தேர்ந்தெடுத்த கதை இது. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் புரியாத புதிராக இருக்கும். ஒரு இடத்துல் சூதாட்டம் ஆடுவார். இன்னொரு இடத்துல பணமும் திருடுவார்.
இந்த படம் சூதாட்ட கதைகளத்தை கொண்டதல்ல. அப்படி என்றால் என்ன மாதிரியான களம், விஜய்சேதுபதியின் கேரக்டர் என்ன என்பதை இப்பொதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறோம்.. விஜய்சேதுபதியின் ஜோடியாக ருக்மணி வசந்த் அறிமுகமாகிறார். யோகிபாபு, படம் முழுவதும் வருவார். முழுக்க முழுக்க மலேசியாவில் நடக்கும் கதை என்பதால் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். அவருக்கும் விஜய்சேதுபதிக்குமான கெமிஸ்ட்ரி திரையில் அழகாக தெரியும்.