சினிமாவில் இந்த நிலை மாறி உள்ளது - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் 'சத்யபாமா'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ், நாகிநீடு, ஹர்ஷவர்ததன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுமன் சிக்கலா இயக்கி உள்ளார். வருகிற ஜூன் 7ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகளை தொடங்கி உள்ளனர். ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் பேசியதாவது: நான் இப்போது மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் என்ற போதிலும் அது எந்த விதத்திலும் என் நடிப்பு தொழிலை பாதிக்கவில்லை. முன்பு திருமணமான நடிகை என்றாலே அவரால் அர்ப்பணிப்போடு நடிக்க முடியாது என கூறி அவருக்கான வாய்ப்புகள் வேறொருவருக்கு சென்று விடும். எனக்கும் கூட அப்படி நடந்துள்ளது. இந்த நிலை இப்போது மாறி உள்ளது. திருமணமாகி, குழந்தை பெற்ற நடிகைகளும் கூட தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக எனக்கு தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. நான் சினிமாவில் நீடித்து நிலைப்பதற்கு என் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் மிக முக்கியமானது. அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் தலையிடாமல் என்னை ஊக்கப்படுத்துவதால், திரையுலகில் எனக்கான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு காஜல் பேசினார்.