41 வயதில் எனக்கு ஏடிஎச்டி குறைபாடு : பஹத் பாசில்
பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில். படத்திற்கு படம் வித்தியாசம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேஷம் படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் ஏ.டி.எச்.டி என்ற குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பஹத் பாசில், ‛‛ஏடிஎச்டி நோயை குணப்படுத்தி விடலாமா என மருத்துவர்களிடம் கேட்டேன். சிறு வயதிலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் குணப்படுத்தி விடலாம் என்றனர். 41 வயதில் கண்டறியப்பட்டால் என்ன செய்வது என கேட்டேன். ஏனென்றால் எனக்கும் ஏ.டி.எச்.டி குறைபாடு உள்ளது'' என்றார்.
ஏ.டி.எச்.டி குறைபாடு என்பது மூளையில் ஏற்படும் நரம்பு தொடர்பான பிரச்னையாம். அதாவது இந்த பாதிப்பு உள்ளவர்கள் கவன குறைவாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாதாம். இந்த வகை குறைபாடு குழந்தைகளை எளிதில் தாக்கும். ஆனால் குணப்படுத்த கூடியது தான். சமயங்களில் பெரியவர்களும் பாதிக்கப்படுவர் என்கிறார்கள் மருத்துவர்கள்.