'மின்னல் முரளி' இயக்குனருக்கு ஜோடியாக நடிக்கும் நஸ்ரியா
நிவின்பாலிக்கு ஜோடியாக 'நேரம்' என்கிற படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா, முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து பெங்களூரு டேஸ், ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய சமயத்தில், நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இந்த நிலையில் சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் உருவாகும் 'சூட்சும தர்ஷினி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நஸ்ரியா. இந்த படத்தில் கதாநாயகனாக 'மின்னல் முரளி' இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் சமீபத்தில் வெளியான 'குருவாயூர் அம்பல நடையில்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.
கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான 'நான்சென்ஸ்' என்கிற படத்தை இயக்கிய எம்.சி.ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.