விஜய்யின் வாழைப்பழ காமெடி : துப்பாக்கி படத்தில் விடுபட்ட காட்சி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ம் வருடம் வெளியான படம் துப்பாக்கி. இவர்கள் கூட்டணியில் முதல் படமாக உருவான இந்த படம், விஜய்யின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெயரையும் பெற்றது. இப்போது வரை அனைத்து தரப்பு ரசிகர்களின் பேவரைட் விஜய் படமாக இது இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் படமாக்கப்பட்டு பின்னர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காமெடி காட்சி குறித்த வீடியோ கிளிப் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதில் விஜய் ஒரு காவல் நிலையத்தில் அமர்ந்து அங்குள்ள காவலர்களிடம் கவுண்டமணி, செந்திலின் கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடியை ஹிந்தியில் விவரித்துச் சொல்வது போலவும் அதைக் கேட்டு காவலர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது போலவும் அந்த காட்சி இருக்கிறது. அதேசமயம் இது படத்தில் இடம்பெறுவதற்காக எடுக்கப்பட்டது போலவும் இன்னொரு பக்கம் பார்த்தால் படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் விஜய் சுற்றியுள்ளவர்களை இதுபோன்று செய்து சிரிக்க வைத்தது போலவும் தெரிகிறது.