கல்கி 2898 ஏடி படத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய கமல்ஹாசன்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கல்கி 2898 ஏடி. வருகிற 27ம் தேதி திரைக்கு வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் எல்லாம் தங்களது தாய் மொழியில் மட்டுமே டப்பிங் பேசியுள்ள நிலையில் வில்லனாக நடித்திருக்கும் கமல்ஹாசன் மட்டும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தனக்குத்தானே டப்பிங் பேசி இருக்கிறார்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், கமல் நடித்த ஒரு காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதில், எத்தனை யுகம் ஆனாலும் எத்தனை வாய்ப்பு கொடுத்தாலும், மனுஷன் மாறல, மாறத் தெரியாது என்ற வசனத்தை கமலஹாசன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.