பொய்யான வசூல் நிலவரம் வெளியிட்டால் நடவடிக்கை : மலையாள தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை
இப்போதெல்லாம் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுவதும், பல கோடி வசூல் என்று போலி விளம்பரம் செய்வதும் அதிகரித்துள்ளது. இது மலையாள சினிமாவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே விளம்பரம் செய்தது. ஆனால் சிராஜ் என்பவர் “நான் இந்த படத்தின் தயாரிப்புக்கு 7 கோடி கொடுத்தேன், 200 வசூலித்தவர்கள் என் பணத்தை திருப்பித் தரவில்லை” என்று புகார் அளித்தார்.
இதனால் தற்போது அமலாக்கத்துறையினர் மலையாள சினிமாக்களின் உண்மையான வரவு, செலவை கண்காணிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலையாள தயாரிப்பாளர் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் “பாக்ஸ் ஆபீஸ் வசூலை அதிகரித்துக் காட்டி, ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம். சில தயாரிப்பாளர்கள் படம் வெளியான சில நாட்களுக்கு பல்க் புக்கிங் செய்து, பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணத்துக்காக பொய்யான திரைவிமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.