பிளாஷ்பேக் : 2 லட்சம் கவிதை எழுதிய பி.பி.ஸ்ரீனிவாஸ்
பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். தேனினும் இனிய பாடல்களை பாடியவர். ஆனால் இவர் ஒரு கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது. 'பிரணவம்' என்கிற கவிதை தொகுப்பை எழுதி வெளியிட்டார். இந்த தொகுப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் வெளியானது. 8 மொழிகளிலும் அவரே கவிதைகளை எழுதி இருந்தார். இது தவிர 2 லட்சம் கவிதை வரை எழுதியிருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.
எந்த விழாவுக்கோ, திருமண நிகழ்வுக்கோ சென்றால். அந்த இடத்திலேயே அந்த விழா தொடர்பாகவோ அல்லது திருமண தம்பதிகளை வாழ்த்தியோ கவிதை எழுதி அங்கேயே வாசிப்பார். காதல் கவிதை, தத்துவ கவிதை, பக்தி கவிதை என தனி தனி கவிதைகளை தனி தனி வண்ண பேனாவில் எழுதுவார். இதனால் தனது சட்டைப் பையில் வண்ண வண்ண பேனாக்களை சொருகி வைத்திருப்பார்.
இதுதவிர 'நவநீதசுமசுதா' என்ற புதிய ராகத்தை கண்டுபிடித்தார். ஏற்கெனவே உள்ள 7 ராகங்களோடு இந்த ராகத்தையும் இணைத்து 'அஷ்டராகமாலிகா'வில் ஒரு பாடல் எழுதினார். இந்த பாடலை டி.கே.பட்டம்மாள் பாடினார்.