பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம்
சரியான தமிழ் உச்சரிப்புக்கு புகழ் பெற்றவர் கண்ணாம்பா . 'மனோகரா' படத்தில் அவர் பேசிய 'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' என்ற வசனம் இன்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் அவரது தமிழ் வசன உச்சரிப்பால் ஒரு படம் தோல்வி அடைந்த வரலாறும் உண்டு. அது 1940ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீ கிருண்ணன் தூது'.
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை கண்ணாம்பா, அங்கு தனியாக ஒரு நாடக கம்பெனியும் நடத்தி வந்தார். அவர் தமிழில் அறிமுகமான படம்தான் 'ஸ்ரீ கிருஷ்ணன் தூது. மகாபாரத யுத்தம் நடந்தபோது பாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் இடையில் தூதராக செயல்பட்ட கிருஷ்ணரின் செயல்பாடுகளை மையமாக கொண்ட படம். ஆர்.பிரகாஷ் இயக்கிய இந்த படத்தில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனாகவும், கண்ணாம்பா திரவுபதியாகவும் நடித்தனர். விசலூர் சுப்ரமணிய பாகவதர் துரியோதனனாக நடித்தார். மோசன் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண செட்டியார் தயாரித்திருந்தார்.
அன்றைக்கு டப்பிங் வசதிகள் இல்லாததால் கண்ணாம்பாவே தமிழில் பேசி நடித்தார். அப்போது கண்ணாம்பாவுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்து பேசினார். அது தெலுங்கு உச்சரிப்பு போல இருந்தது. திரவுபதியின் சபதம்தான் படத்தின் முக்கிய பகுதி. திரவுபதிக்குதான் அதிக வசனம் அதனால் கண்ணாம்பாவின் தெலுங்கு பாணியிலான தமிழ் உச்சரிப்பபை மக்கள் ரசிக்கவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது. அதே கண்ணம்மாதான் பிற்காலத்தில் 'மனோகரா' படத்தை தன் தமிழ் வசனத்தால் வெற்றி பெற வைத்தார் என்பது தனி வரலாறு.