'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும்
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'பெருசு'. அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்குகிறார். வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து ஸ்டோன் பெஞ்சின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கார்த்திகேயன் கூறும்போது , “ ‛பெருசு' படத்திற்காக இயக்குநர் இளங்கோ ராமுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படத்தில் புதிய கதை சொல்லல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். முழுமையான பொழுதுபோக்குப் படமாக இது நிச்சயம் இருக்கும். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் ஈர்க்கக்கூடிய கதையாக இது உள்ளது. 2025 கோடையில் திரைக்கு வர இருக்கிறது என்றார்.
இயக்குனர் இளங்கோ ராம் கூறும் போது ஒரு பெரியவரை சுற்றி நடக்கும் குடும்ப கதை. மனிதர்களின் இயல்பான குணங்களை காமெடியாக சொல்லும் படம். இந்தப் படத்தின் கதையும் காட்சியும் முதியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். பெரியோர்களை கிராமப்புறங்களில் 'பெருசு' என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அதனையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். என்றார்.