மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்தாண்டு ஜன., 25ல் இலங்கையில் மறைந்தார். அவரது உடல் தேனியில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைந்து ஓராண்டு ஆன நிலையில் இளையராஜா உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛என் அருமை மகள் பவதா (பவதாரிணி) எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான மகள் பிரிந்த பின்பு தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என் கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக எனக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. பிப்., 12ல் பவதாவின் பிறந்தநாள். அன்றைய தினம் தான் அவருக்கு திதி வருவதால் அதை நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று எண்ணி உள்ளேன். அதில் எல்லா இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.