மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
249 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
249 days ago
இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக மலையாளத்தில் இயக்கியுள்ள ‛டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் ஜன.23ல் வெளியானது. துப்பறியும் கதை அம்சத்துடன் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் இயக்குனர் கவுதம் மேனன் இத்தனை வருட திரையுலக பயணத்தில் தான் சந்தித்த பல கசப்பான அனுபவங்களையும் பல ஹீரோக்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது திரையுலகில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே 2001ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் டைட்டில் கார்டில் அவரது பெயர் கவுதம் என்று மட்டுமே இடம்பெற்றிருந்தது, அதன் பிறகு வந்த அடுத்தடுத்த படங்களில் எல்லாம் கவுதம் மேனன் என்றும், வாரணம் ஆயிரம் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் என்றும் டைட்டில் கார்டில் தன் பெயரை இடம்பெறச் செய்தார் கவுதம் மேனன்.
அதேசமயம் முதல் படத்தில் கவுதம் என பெயர் வைத்ததன் மூலம் ஒரு தமிழ் இயக்குனர் போல தன்னை காட்டிக்கொண்ட கவுதம் மேனன், அடுத்ததாக தனது படங்களில் எல்லாம் மலையாள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக பெயருடன் மேனன் என என்று சேர்த்துக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் பரவலாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து மனம் திறந்து உள்ள இயக்குனர் கவுதம் மேனன் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் என்ன நடந்தது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதல் படத்திலேயே என் முழு பெயரான கவுதம் வாசுதேவ் மேனன் என்று தான் டைட்டில் கார்டில் போட விரும்பினேன். வாசுதேவ் என்பது என் தந்தையின் பெயர் அல்ல.. அது என் தாத்தாவின் பெயர். நான் பிறந்தபோதே அதையும் சேர்த்தே எனக்கு பெயர் வைத்து விட்டார்கள், மேனன் என்பது குடும்ப பெயர். என்னுடைய பள்ளி சான்றிதழ்களில் ஆரம்பத்தில் இருந்தே கவுதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர்தான் இருந்து வருகிறது. ஆனால் அப்படி மேனன் என்று சேர்த்து டைட்டில் கார்டு போட்டால் ஏதோ மலையாள இயக்குனர் போன்று ரசிகர்களுக்கு பீல் ஆகிவிடும் என்பதால் பெயரை சுருக்கி கவுதம் என்று போட நிர்பந்தித்தார்கள். வேறு வழியின்றி நானும் ஒப்புக் கொண்டேன்.
அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்த்து அதில் சில மாறுதல்களை செய்வதற்காக வல்லரசு பட இயக்குனர் மகாராஜனை அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால் அதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு தான் எனது அடுத்த படத்தில் இருந்து கவுதம் மேனன் என்று டைட்டில் கார்டில் பெயர் போட்டேன். வாரணம் ஆயிரம் படத்தின் போது தான் இதுதான் சரியான தருணம் என்று கவுதம் வாசுதேவ் மேனன் என்று என் முழு பெயரையும் டைட்டிலில் இடம் பெறச் செய்தேன்” என்று கூறியுள்ளார் கவுதம் மேனன்.
249 days ago
249 days ago