மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
209 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
209 days ago
எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, 1956ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “தாய்க்குப் பின் தாரம்”. சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் தயாரித்த முதல் திரைப்படமான இது, அவருக்கும் மகத்தான வசூலைப் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது. அதன்பின் பிற நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வந்த தேவர், ஐந்து வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் எம் ஜி ஆரை வைத்து தயாரித்த திரைப்படம்தான் “தாய் சொல்லைத் தட்டாதே”. 1961ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படமும் 20 வாரங்கள் வரை ஓடி வசூல் சாதனை புரிந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திலிருந்துதான் எம் ஜி ஆரின் படங்களுக்கு உரையாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது வசனகர்த்தாவான ஆரூர் தாஸூக்கு.
படப்பிடிப்பின் போது எம் ஜி ஆரின் பார்வையும், செயலும் தன்னை சிவாஜியின் கூண்டிலிருந்து வந்தவன் என எம் ஜி ஆர் நினைக்கின்றாரோ என்ற ஒரு எண்ணம் மேலோங்கச் செய்திருக்கிறது ஆரூர் தாஸிற்கு. ஒரு நாள் எம் ஜி ஆருக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும்படி தேவர், ஆரூர் தாஸிடம் கூற, இவரும் வசனத்தை படித்துக் காண்பித்திருக்கின்றார் எம் ஜி ஆரிடம். அன்று எம் ஜி ஆரிடம் இவர் படித்துக் காட்டிய வசனம் இதுதான். “எங்கப்பா இறந்ததுக்கப்புறம் எங்கம்மா எந்த ஒரு மங்கல காரியத்திலேயும் பங்கெடுத்துக்கிறது வழக்கம் இல்லே. பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுணம்னு சொல்லுவாங்க. ஆனா நான் விடிஞ்சதும் முதல்லே எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம்! அந்தத் தாய் சொல்லைத் தட்டமாட்டேன்”.
வசனத்தைக் கேட்ட எம் ஜி ஆர், உடனே மீண்டும் ஒருமுறை படித்துக் காட்டு என கூற, மீண்டும் படித்துக் காட்டியிருக்கின்றார் ஆரூர்தாஸ். நீங்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவரா என்று ஆரூர்தாஸைப் பார்த்து எம் ஜி ஆர் கேட்க, ஆம்! என பதிலளித்திருக்கின்றார் ஆரூர்தாஸ். தாயைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கின்ற இந்த வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்திப் போகின்றது. இது எனக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கு. என் தாய்தான் எனக்கு தெய்வம். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என எம் ஜி ஆர் அன்று கூறியது பெரும் மகிழ்வைத் தந்தது ஆரூர்தாஸூக்கு.
07.11.1961 தீபாவளி அன்று வெளிவந்த “தாய் சொல்லைத் தட்டாதே” திரைப்படம் எம் ஜி ஆர், தேவருக்கு மட்டுமல்ல படத்தின் வசனகர்த்தாவான ஆரூர்தாஸூக்கும் மகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து “குடும்பத் தலைவன்”, “தாயைக் காத்த தனயன்”, “நீதிக்குப் பின் பாசம்”, “தொழிலாளி”, “வேட்டைக்காரன்” என எம் ஜி ஆர் மற்றும் தேவர் கூட்டணியில் வெளிவந்த அனைத்து வெற்றித் திரைப்படங்களின் உரையாடல்களையும் எழுதிய பெருமைக்குரியவராகவும் அறியப்பட்டார் ஆரூர்தாஸ்.
209 days ago
209 days ago