'ரெட்ரோ' தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரெட்ரோ'. இப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
சூர்யாவின் முந்தைய படமான 'கங்குவா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தது. அதனால், இந்த 'ரெட்ரோ' படம்தான் சூர்யாவைக் காப்பாற்றியாக வேண்டும். கார்த்திக் சுப்பராஜ் ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே ஒரு நல்ல மார்க்கெட் உண்டு. இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் 9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அதை வாங்கி உள்ளதாம். படத்தை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த நிறுவனம் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை அடுத்து தயாரிக்க உள்ளது. 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அப்படத்தை இயக்க உள்ளார். அதனால்தான், 'ரெட்ரோ' உரிமையை அவர்களிடமே கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'ரெட்ரோ' படத்தை சூர்யாவுக்குச் சொந்தமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.