தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர்
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணவத். பாடலாசிரியர், திரைப்பட எழுத்தாளர் ஆக இருப்பவர் ஜாவேத் அக்தர். இருவருக்கும் இடையே ஐந்து வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
பிரபல ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் இறந்த போது, கங்கனா ரணவத் பேட்டி ஒன்றில் ஜாவேத் அக்தர் பற்றி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதனால், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜாவேத் அக்தர். பதிலுக்கு அவர் மீது குற்றவியல் மிரட்டல், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் கங்கனா ரணவத்.
கடந்த ஐந்து வருடங்களாக இந்த வழக்கு மும்பையில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருவரும் அவர்களது வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த மத்தியஸ்த அறிக்கையில், ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் கொடுத்த பேட்டி தவறான புரிதலால் அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். நிபந்தனை எதுவும் இல்லாமல் நான் பேசியவற்றை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் அது போல பேச மாட்டேன். ஜாவேத் அக்தருக்கு இதனால் ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திரையுலகத்தில் மிகவும் சீனியரான அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அக்தர் அளித்த மத்தியஸ்த அறிக்கையில், 'கங்கனா ரணவத் அளித்த அறிக்கையின்படி நானும் எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
நேற்று இருவரும் மும்பை சிறப்பு மாஜிஸ்ட்ரோட் கோர்ட்டில் ஆஜராகி அவர்களது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
அதன்பின் ஜாவேத் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த கங்கனா, “இன்று(நேற்று) ஜாவேத் ஜியும் நானும் எங்கள் சட்டப் பிரச்னையை மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக் கொண்டோம். அதில் ஜாவேத் ஜி மிகவும் அன்பாகவும் கருணையுடனும் இருந்தார். நான் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு பாடல்களை எழுதவும் ஒப்புக் கொண்டுள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார்.