நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து, மறைந்தவர் சிவாஜி கணேசன். இவரது மகன்களான ராம்குமார் (நடிகர், தயாரிப்பாளர்), பிரபு(நடிகர்), இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த் (நடிகர், தயாரிப்பாளர்), விக்ரம் பிரபு(நடிகர்) ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.
ராம் குமாரின் மகனான துஷ்யந்த், ‛ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை, நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.