இந்திய இலங்கை கலைஞர்கள் இணையும் 'அந்தோனி'
ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் இலங்கையிலும் திரையிடப்பட்டு வந்தது. இந்தியா-இலங்கை கூட்டு தயாரிப்பில் பல படங்கள் உருவானது. தவமணி தேவி, பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன், சிலோன் மனோகர் உள்ளிட்ட பல இலங்கை கலைஞர்கள் தமிழுக்கு வந்தார்கள்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போதும், போருக்கு பின்னரும் இவை அனைத்தும் நின்று விட்டது. சமீபகாலமாக தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் இலங்கையில் நடக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் புதுமுகங்கள் இணைந்து தயாரிக்கும் 'அந்தோனி' என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
இந்த படத்தில் கயல் வின்சன்ட் நாயகனாக நடிக்கிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி.ஜே.பானு நாயகியாக நடிக்கிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். இலங்கை மற்றும் இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது. அதோடு இப்படம் இலங்கையின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிறது.