சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ்
'சர்க்கார், தர்பார்' படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் ஏ ஆர் முருகதாஸின் திரையுலக பயணம் இனி அவ்வளவுதான் என்று பலரும் நினைத்தபோது, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பக்கம் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராசி' படத்தை துவங்கினார். அதேசமயம் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பும் வந்தது. அதனால் மதராசி படத்தை விட சிக்கந்தர் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விறுவிறுப்புடன் படத்தை முடித்துள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரும் மார்ச் 30ம் தேதி (ஞாயிறு) இந்த படம் குடி பத்வா மற்றும் யுகாதி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை சல்மான்கானின் மொத்த குடும்பமும் சிறப்பு காட்சி திரையிடல் மூலம் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த நிகழ்வில் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸும் பங்கேற்றுள்ளார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா தயாரித்துள்ளார். 2014ல் வெளியான 'கிக்' படத்தை தொடர்ந்து பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சல்மான்கானை வைத்து அவர் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.