உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான்

என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான்

நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் இயக்குனர் அவதாரம் எடுத்து மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அரசியல் பின்புலத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ல் வெளியாக இருக்கிறது.

மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பல பிரபலங்களும் இதிலும் இடம் பெற்றுள்ளனர். தவிர இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக இருப்பதால் பாலிவுட்டில் இருந்தும் குணச்சித்திர நடிகையான நிஹாந்த் கான் ஹிட்டு என்பவர் சுபத்ரா பென் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரி ஆவார்.

சமீபத்திய இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பிரித்விராஜ் பேசும்போது, நான் ஒரு சில பாலிவுட் படங்களை பார்த்துவிட்டு சுபத்ரா பென் கதாபாத்திரத்திற்கு இந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என வரவழைத்து ஆடிஷன் செய்து பார்த்தேன். அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். அப்போது என்னுடைய மேனேஜர், சார் இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி என்கிற தகவலை சொன்னதும் நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.. உடனடியாக அமீர் கானுக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினேன். இதோ இப்போது கூட அமீர்கான் எனக்கு போன் செய்து என்னுடைய சகோதரி இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறாரா என்று கேட்டார். நான் சூப்பராக நடித்திருக்கிறார் என்று பதில் சொன்னேன்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !