உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் (பெப்சி) தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சம்பள உயர்வு, திரைப்பட தயாரிப்பு செலவினங்கள் தொடர்பாக இரு சங்கத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் மற்றொரு சங்கமான பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர்களை கொண்டே பணிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து தொழிலாளர்கள் மறு சீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் நிலுவையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவின்படி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ஆதரவு வழங்குகிறது. மேற்படி மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வருகிற மே மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !