உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சினிமா தயாரிக்க மோட்டார் நிறுவனத்தை விற்ற தயாரிப்பாளர்

பிளாஷ்பேக்: சினிமா தயாரிக்க மோட்டார் நிறுவனத்தை விற்ற தயாரிப்பாளர்

சென்னையில் மோட்டார் கார் வியாபாரம் செய்து வந்தவர் வேலூரை சேர்ந்த நடராஜ முதலியார். சினிமா தயாரிப்பு, தென்னிந்தியாவுக்கு வராத காலத்திலேயே அவருக்கு சினிமா ஆர்வம் இருந்தது. தாதா சாஹேப் பால்கே இயக்கிய இந்தியாவின் முதல் மவுனப்படமான 'ஹரிச்சந்திராவை' சென்னை கெயிட்டி தியேட்டருக்கு சென்று பார்த்தார்.

தானும் அப்படி ஒரு படத்தை தயாரித்து, இயக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அவர் இதற்காக தனது கார் கம்பெனியை சிம்சன் கம்பெனிக்கு விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார். முதலில் சினிமாவை கற்ற வேண்டுமே. இதற்காக புனே சென்று அப்போது குறும்படங்களை இயக்கி கொண்டிருந்த ஸ்மித் என்ற ஆங்கிலேயரிடம் சினிமா கற்றார்.

பயிற்சிக்கு பின், பூனேவிலிருந்து சென்னை திரும்பினார் நடராஜ முதலியார். 1916-ம் ஆண்டு 'இந்தியா பிலிம் கம்பெனி' என்ற பட நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சினிமா ஸ்டுடியோ .

தனக்கு சினிமா கற்றுக் கொடுத்த ஸ்மித்திடம் இருந்து கேமராவை வாங்கி கொண்டு வந்த முதலியார் லண்டனில் இருந்து பிலிம் சுருளை வரவழைத்து அவர் தயாரித்து இயக்கிய முதல் படம் 'கீசகவதம்'. மகாபாரதத்தின் கிளை கதை இது. இந்த படத்திற்கு பிறகு மேலும் சில படங்களை தயாரித்த அவர் பின்னர் திரையுலகில் இருந்து விலகி கொண்டார்.

தென்னிந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படுவரும், தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குனருமான நடராஜ முதலியாரின் 54வது நினைவு நாள் இன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !