உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல்

அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளிநாட்டுப் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் வெளியாகும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் அதனால் பாதிக்கப்படும் என்பதே அதற்குக் காரணம். அப்படி நடந்தால் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு மற்ற நாடுகளிலும் வரி விதிப்பு அதிகரிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் இன்னும் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் தெரிவித்ததாக அமெரிக்க சினிமா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“வெளிநாட்டுத் திரைப்பட வரி குறித்து இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் ஹாலிவுட்டை அது மீண்டும் சிறந்த ஒன்றாக மாற்றும். நமது நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவை நிறைவேற்றுவதற்கான அனைத்து விருப்பங்களையும், நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதனால், டிரம்ப் அறிவித்தபடியான 100 சதவீத வரி விதிப்பு உடனடியாக நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !