பழங்குடியினர் என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்த விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தி பேசும்போது, பாகிஸ்தானுக்குள்ளேயே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், அவர்கள் 500 வருடத்திற்கு முன்பு ஆதிவாசிகள் அடித்துக் கொண்டது போல அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.
அதேசமயம் அவர் ஆதிவாசிகள் என்று பயன்படுத்திய வார்த்தை பழங்குடியின மக்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி பல அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பேசிய வார்த்தை இந்த அளவுக்கு சர்ச்சை ஆகும் என எதிர்பார்க்காத விஜய் தேவரகொண்டா, அது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எந்த உள்நோக்கத்துடனும் பழங்குடியினரை சிறுமைப்படுத்தும் விதமாக அந்த நிகழ்வில் பேசவில்லை. என்னுடைய பேச்சின் நோக்கம் நம்முடைய ஒற்றுமை, தேச பாதுகாப்பு குறித்து தான் இருந்தது. அதை உதாரணப்படுத்தி பேசுவதற்காக தான் அப்படி ஒரு வார்த்தையை நான் பயன்படுத்தினேனே தவிர, யாரையும் அவமதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி என்னுடைய வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.