ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள்
'அட்டக்கத்தி' தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து', எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பர்ஹானா' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் அடுத்த படம் 'டிஎன்ஏ'. இதில் அதர்வா, நிமிஷா சஜயன் நடித்த வருகிறார்கள். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. பொதுவாக ஒரு படத்துக்கு ஒரு இசையமைப்பாளர்தான் இசையமைப்பார், சில படங்களில் 2பேர் இசையமைத்து இருக்கிறார்கள்.
ஆனால், 'டிஎன்ஏ' படத்தில் சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 பேர் இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் படங்களில் அதிக பாடல்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி 5பேருக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்து இருப்பதாக தகவல்.
இதற்கு முன்பு வசந்த் இயக்கத்தில் 2002ல் வெளியான ஷாம், சினேகா நடித்த 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்துக்கும் ரமேஷ் விநாயகம், ஸ்ரீனிவாஸ், முருகவேல், அரவிந்த் ஷங்கர், ராகவ் ராஜா 5 பேர் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.