சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛டூரிஸ்ட் பேமிலி'. ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.50 கோடி வசூலை நெருங்கிவிட்டது. சசிகுமார் நடித்து வெளியான படங்களில் இது தான் அதிக வசூலை தந்த படமாக மாறி உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சசிகுமார் ‛அயோத்தி, கருடன், நந்தன், டூரிஸ்ட் பேமிலி' என அடுத்தடுத்து வெற்றிகளை தந்துள்ளார். பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றாலே சம்பளத்தை உயர்த்தும் நடிகர்களுக்கு மத்தியில் தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றியாக தந்த போதும் தனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் சசிகுமார்.
இதுதொடர்பாக டூரிஸ்ட் பேமிலி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், ‛‛இந்தப்பட வெற்றியால் என் சம்பளத்தை உயர்த்த போகிறீர்களா என பலரும் கேட்கிறார்கள். நிச்சயம் உயர்த்த மாட்டேன். காரணம் நான் நிறைய தோல்வியை சந்தித்துள்ளேன். இந்த படம் முதல்நாளிலேயே 2 கோடி அல்லது 2.5 கோடி வசூலித்திருக்கலாம். ஆனால் என் ஒரு படம் மொத்தமே ரூ.2 கோடி தான் வசூலித்தது. ஒரு நடிகரின் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று வெளிப்படையாக சொன்னால் தான் அவர்கள் சம்பளம் பற்றி சிந்திப்பார்கள். எனது சுந்தரபாண்டியன், குட்டிபுலி ஆகியவை தான் அதிகம் வசூலித்த படங்கள். அதை டூரிஸ்ட் பேமிலி முறியடித்துள்ளது'' என்றார்.